இந்நூல்....


தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளது. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள் மற்றும் பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம்.  இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளது மற்றும் தொடர்ந்து அவர்களின் பண்பாடாகவே வளர்ந்து வருகிறது என்னும் கருத்தை வலியுறுத்துகிறது இந்நூல். சங்கத் தமிழ் இலக்கியங்களையும் பக்தி இலக்கியங்களையும் அவை கூறும் கருத்துகள் மட்டுமன்றி அவை கையாளும் இலக்கிய உத்திகளையும், அவற்றால் ஏற்பட்ட மொழி மொற்றங்கள் பற்றியும் விளக்கிக் கூறும் முயற்சி இது.  இலக்கியத் திறனாய்வாக அமையும் இந்நூல் தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழர்ப் பண்பாடு இவற்றை இலக்கியங்கள் வழி இணைக்க முற்படுகிறது.  தமிழ்ப் புலவர்கள் தங்கள் திறமையை உவமைகளைக் கையாளும் முறைவழி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  அவர்கள் கையாண்ட உவமைகள் உருவகங்களாகக் காலப் போக்கில் மாறித் தமிழர்ப் பண்பாடாகத் தமிழர்களோடு இணைந்துள்ளது என்னும் கருத்தை இந்நூல் “இலக்கிய உத்திகள்” என்னும் தலைப்பின் கீழ் அலசுகிறது.  இயல்பு வாழ்க்கை என்பது தோளையும் கூந்தலையும் பாராட்டி இலக்கியங்கள் வழி வெளிப்படுத்தி வாழ்வதே என்னும் கருத்தை ஐங்குறுநூறு பாடலில் (178) காண்கிறோம். அகமென்றும் புறமென்றும் பிரித்தறிந்த தமிழ் இலக்கியங்கள் பக்திக்கு வழி விட்டது இடைக்காலத்தில். தோளை வலிமைக்கு உவமையாகக் கருதிய இலக்கியங்கள் அதை இறைவனின் அழகுக்கு ஒப்பிட்டு வலிமையினின்று மென்மை நோக்கி நகர்ந்தது தமிழர்ப் பண்பாடு.  இவ்வகை மாற்றங்கள் பலவற்றை கோடிட்டுக் காட்டுகிறது, “தமிழ்ச் சமய இலக்கியங்களின் திறனும் சமயக் கோட்பாடுகளும்” என்னும் பகுதி.  “காலினில் ஊரும், கரும்பினில் கட்டியும், பாலினுள் நெய்யும், பழத்தினில் இரதமும்” (திருமந். 2639) தமிழர்கள் அறிந்துகொள்ளவேண்டியவை. அதற்கான முறையான திறன்களைத் தமிழர்கள்  பெறவேண்டும் எனவே இவ்வகை உமைகள் வழிப் புதுப் புதுக் கோட்பாடுகளை ஏற்படுத்தித் தமிழர் வாழ்வை மேன்மேலும் வளம்பெற வைத்தவை தமிழ் இலக்கியங்கள் எனலாம்.  தமிழ் இலக்கியங்கள் வளர்ந்த முகத்தான் தமிழ் மொழியும் வளர்ந்திருக்கிறது. மொழியை வெவ்வேறு விதத்தில் கையாளும் போது அது காலப் போக்கில் பல மாற்றங்களை நேர்க்கொள்கிறது.  இவ்வகையில் சங்ககாலத் தமிழையும் இக்காலத்தமிழையும்  மொழி மற்றும் இலக்கியப் பண்போடு இணைத்து நோக்குகிறது, “மொழி மாற்றங்களும் இலக்கியத்தின் பங்கும்” என்ற பகுதி. “நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்” (திருமந். 295) என்பதையே இக்காலத்தில், “நூலைப் பற்றி அறியாதவர்கள் திறன்படமாட்டார்கள்” என அறிகிறோம். இவ்வகைப் பயன்பாடுகள், “பற்றி” என்னும் வேற்றுமைப் பொருளும் “மாட்டு” என்னும் எதிர்கால விகுதியும் இக்காலத்துக்கு வந்ததற்கான இலக்கியச் சுவடுகள் எனக் கூறலாம். இவ்வகை இலக்கியச் சுவடுகளை இலக்கியத் திறனாய்வோடு ஆய்ந்தறிந்து தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழர்ப் பண்பாடு ஆகியவற்றை இணைக்க முற்படுகிறது இந்நூல்.

 


 

 

ஆசிரியரைப் பற்றி...

முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களின் அறிவுப் பயணங்களும் வாழ்வு முறையும் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் ஆய்ந்தறியும் முயற்சியோடு வளர்ந்து வந்துள்ளன எனலாம்.  1988ம் வருடத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆய்வுப் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓராண்டு பணிசெய்த பிறகு அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக் கழகம் வழித் தன்னுடைய கல்விப் பயணத்தை 1989ம் ஆண்டு தொடங்கினார்.  மொழியைக் கணினி வழி ஆய்ந்த வாசு அரங்கநாதன், இலக்கியத்திலும் சமயத்திலும் ஈடுபடும் விதமாகத் தன்னுடைய இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2010ம் ஆண்டு பெற்றார்.  தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் தெற்காசியத் துறையின் மாணவர்களுக்கு வாஷிங்டன் பல்கலைக் கழகம், விஸ்கான்சின் பல்கலைக் கழகம், மிச்சிகன் பல்கலைக் கழகம் மற்றும் பென்சில்வேனியாப் பலகலைக்கழகங்களில் கற்றுக்கொடுத்திருக்கிறார்.  தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வுசெய்து வரும் முனைவர் வாசு அரங்கநாதன் பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தின் தெற்காசியத் துறையில் தற்போது கடந்த பத்து வருடங்களாகப் பணி புரிந்து வருகிறார். “இக்காலத் தமிழில் வேற்றுமைகள்” என்பது பற்றியது இவருடைய அண்ணாமலைப் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வேடு.  “திருமந்திரத்தின் மொழித் திறன்” என்பது பற்றியது இவருடைய பென்சில்வேனியாப் பல்கலைக்கழக ஆய்வேடு.  Tamil Language in Context: A Comprehensive Approach to Learning Tamil”, “Computational Approaches to Tamil Linguistics” என்னும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு மற்றும் சமயம் ஆகியக் கருத்துகளில் கிட்டத்தட்ட இருபது கட்டுரைகளை வெவ்வேறு நூல்களிலும் பத்திரிகைகளிலும் வெளியிட்டுள்ளார்.   இவருடைய தமிழ்க் கணினி ஆய்வை ஊக்குவிக்கும் விதமாகக் கனடாவின் “Tamil Literary Garden” என்னும் அமைப்பு இவருக்குச் சிறந்த தமிழ்க் கணினியாளர் என்னும் “சுந்தர இராமசாமி விருதை” 2011ம் வருடம் வழங்கிப் பாராட்டியது.  இவருடைய இரண்டாவது நூலுக்கு, மொழியையும் கணினியையும் இணைக்கும் சிறந்த முயற்சி என “அச்சுத மேனன் விருதை”, Dravidian Linguistics Association, Kerala கொடுத்துப் பாராட்டியுள்ளது. இவருடைய முதல் நூலைத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்கள் பலர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை, சப்பான், கனடா போன்ற நாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.